டெல்லி துவாரகாவில் இடம்பெற்ற கொடூரமான கொலை சம்பவம், நாட்டின் மனசாட்சியை உலுக்கிய முஸ்கன் ரஸ்தோகி மற்றும் சோனம் ரகுவன்ஷி வழக்குகளுக்குப் பிறகு, மேலும் ஒரு அதிர்ச்சி நிகழ்வாகி உள்ளது. சுஷ்மிதா என்ற பெண், தனது கணவர் கரண் தேவ் என்பவரை தனது காதலன் உதவியுடன் திட்டமிட்டு கொலை செய்துள்ளார். இவரது காதலன் கரனின் உறவினரான அவரது மாமாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தனது கணவரின் உயிரை பறிக்கும் முன், சுஷ்மிதா போலீசாரை தவறாக வழிநடத்தும் வகையில் திட்டமிட்ட சதியையும் வகுத்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் ஜூலை 13ஆம் தேதி, உத்தம்நகர் பகுதியில் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கரண் தனது வீட்டில் மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறி PCR-க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், போலீசாரின் தொடக்க விசாரணையில் சந்தேகம் எழ, பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பிரேத பரிசோதனையில் கரணின் உடலில் மின்சாரம் தாக்கிய தடயங்கள் இருந்தபோதிலும், தூக்க மாத்திரை மற்றும் போதை மருந்துகளின் பாதிப்பும் உறுதியாக அமைந்தது. இது நேர்மறை சாட்சிகளாக மாற்ற, போலீசாரின் விசாரணை தீவிரமானது.

கரணின் தம்பி குணால் தேவ், தனது சகோதரனின் மரணம் சந்தேகத்திற்கு இடமளிப்பதாக கூறி, ஜூலை 16ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்தார். அவரது கைபேசி மற்றும் சமூக ஊடக தகவல்களில் சுஷ்மிதா மற்றும் அவரது காதலனின் இடையிலான உரையாடல்கள் மற்றும் உறவு தெரிய வந்தது. அதில், கரணை கொல்வதற்கான திட்டங்களைத் தெளிவாக விவரித்திருந்தனர். இதனையடுத்து சுஷ்மிதாவும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம், சமீபத்தில் நாடு முழுக்க இடம்பெறும் கணவரை மனைவி கொலை செய்யும் தொடர் சம்பவங்களில் இன்னொரு அத்தியாயமாகவே இருக்கிறது. குடும்ப உறவுகள், நம்பிக்கைகள் அனைத்தும் விலகி, இந்நிலை உருவாகும் விதம் சமூகத்தை சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது.