ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினம் பகுதிகளில் பரிமேட்ச், ஜீட் வின், லோட்டஸ் 365 போன்ற சூதாட்ட செயலிகள் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கடுமையான புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து அமலாக்கத்துறை (ED) விசாரணையை தீவிரமாக மேற்கொண்டது.
விசாரணையின் போது, குறித்த சூதாட்ட செயலிகளுக்கான விளம்பரங்களில் பிரபல திரைப் பிரமுகர்கள் நடித்துள்ளதும், அதை நம்பி பொதுமக்கள் பெரும் அளவில் பணத்தை இழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஒருவரது புகாரில், அவர் மட்டுமே 3 கோடி ரூபாய் இழந்ததாக கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது ED வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதற்காக இந்த பிரபலங்கள் மிகப்பெரிய அளவில் கமிஷன் தொகைகளை பெற்றதாகவும், பலரது வங்கி பரிவர்த்தனைகள், டிஜிட்டல் பணமாற்ற விவரங்கள் தற்போது சோதனையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையும் விரைவில் தொடங்க இருக்கிறது.
இதனையடுத்து, தற்போது கூகுள் மற்றும் மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம்) போன்ற முன்னணி டெக் நிறுவனங்களுக்கு ED நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிறுவனங்கள் சூதாட்ட செயலிகளுக்கான விளம்பரங்களை தங்கள் தளங்களில் இடம் அளித்து, சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த வழக்கில் விளக்கம் அளிக்க வரும் ஜூலை 21ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த நடவடிக்கைகள், சமூக ஊடகங்களில் சூதாட்ட விளம்பரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் முக்கிய கட்டமாக அமைந்துள்ளது.
