அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12-ம் தேதி லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளில் கட்டுப்பாட்டை இழந்து தரையுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 242 பயணிகள் மற்றும் விமான குழுவினருடன் மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஆரம்ப விசாரணை அறிக்கையில் 2 விமானிகளுக்குள் ஏற்பட்ட உரையாடல் வெளியானது. அதில் ஒருவர் “ஏன் எரிபொருளை நிறுத்தினீர்கள்?” என கேட்பதும், மற்றொருவர் “நான் நிறுத்தவில்லை”. என்று பதில் அளிப்பதும் பதிவாகியிருந்தது.
இந்த உரையாடல் விபத்தில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் நிலையில், தற்போது சில சர்வதேச ஊடகங்கள் அலட்சியமாக செய்திகளை வெளியிட்டுள்ளதாக விமான விபத்து புலனாய்வு பிரிவு கண்டனம் தெரிவித்துள்ளது. அதாவது விசாரணை முடிக்கப்படாத நிலையில், ஆரம்ப அறிக்கையின் தகவல்களை தவறாக புரிந்து கொண்டு முடிவுகளை சுட்டி காட்டுவதாக கூறியுள்ளனர். இந்த செய்தியை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற ஊடகம் வெளியிட்ட நிலையில் விமானத்திற்கான எரிபொருள் விநியோகத்தை கேப்டன் தான் நிறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
இது விபத்துக்கான முக்கிய காரணமாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் AAIB தனது அறிக்கையில் இது குறித்து எந்த உறுதியான தகவலும் தரவில்லை என தெரிவித்துள்ளது. வெளிநாட்டு ஊடகங்கள் எந்தவொரு ஆதாரமுமின்றி செய்திகளை வெளியிடுவது விசாரணை முறையை பாதிக்க கூடியது என்று இந்திய விமானிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக FIP தலைவர் கேப்டன் ரந்தாவா கூறும்போது, ஆதாரமற்ற செய்திகளை பரப்பி விமானிகளை குற்றவாளிகளாக காட்டும் முயற்சி நியாயமல்ல என்று கூறியுள்ளார். மேலும் “ஊடகங்கள் இப்படி செய்திகளை விரைந்து பரப்புவதை தவிர்க்க வேண்டும். விசாரணையின் முழுமையான அறிக்கை வந்த பின்னரே உண்மையை அறிவது அவசியம்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
