ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சோலன் மாவட்டத்திற்கு உட்பட்ட பர்வானு பகுதியில் அமைந்துள்ள பிரதான சுங்கச்சாவடியில்  நைட்டு நேரத்தில் நடைபெற்ற ஒரு திகிலூட்டும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 21ஆம் தேதி இரவு சுமார் 11:22 மணியளவில், சுங்கச்சாவடி அருகே வழக்கம் போலத் தனது பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த ஊழியர் ஒருவர், அந்த வழியாக அதிவேகத்தில் வந்த வெள்ளை நிற எஸ்.யூ.வி  காரை நிறுத்தக் கோரி தனது கையை உயர்த்திக் சைகை காட்டியுள்ளார்.

ஆனால், அந்த காரை ஓட்டிவந்த ஓட்டுநர் வண்டியின் வேகத்தைக் குறைப்பதற்குப் பதிலாக, மேலும் முடுக்கிவிட்டு சுங்கச்சாவடி தடுப்பையும் தாண்டி அந்த ஊழியர் மீது நேருக்கு நேராக மோதிவிட்டு எந்தவித தயக்கமும் இன்றி மின்னல் வேகத்தில் தப்பியோடியுள்ளார்.

இந்த பயங்கரமான மோதலின் தாக்கத்தால் சுங்கச்சாவடி ஊழியர் தூக்கி வீசப்பட்டபோதிலும், அவர் நல்வாய்ப்பாகப் பெரிய விபத்துகளில் இருந்து நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்; எனினும் அவருக்கு இந்த விபத்தில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அங்கு பணியில் இருந்த மற்ற சக ஊழியர்கள் உடனடியாக ஓடிவந்து படுகாயமடைந்த தமது தோழருக்கு உதவிக்கரம் நீட்டினர்.

சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்த அச்சுமூட்டும் காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருவதுடன், பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற பொறுப்பற்ற டிரைவர்களின் செயல்களுக்கு எதிராகக் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

இந்த விபத்து குறித்து உடனடியாக உள்ளூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிசிடிவி பதிவுகளை முழுமையாகக் கைப்பற்றி தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சுங்கச்சாவடிகளில் பணியாற்றும் சாதாரண ஊழியர்களின் உயிரோடு விளையாடும் இது போன்ற சட்டவிரோத மற்றும் ஆபத்தான ஓட்டுநர் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடித்துக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தலைமறைவாகியுள்ள அந்த வெள்ளை நிற கார் மற்றும் அதன் ஓட்டுநரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.