மும்பை சிவாஜி பார்க் பகுதியில், ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 41 வயதான தீபிகா படில் என்ற பெண், தன் பழைய வகுப்புத் தோழரிடம் ₹1.25 கோடி மோசடிக்குள்ளான சம்பவம் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருந்த இந்த பெண், பழைய நண்பரான சந்தீப் தனாவடே என்பவரிடம் இருந்து வீடு வாங்க முடிவெடுத்தார். சந்தீப், தன்னை முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் துணைத் தலைவராக (Vice President) பணியாற்றுகிறேன் என கூறியுள்ளார்.
2019-ம் ஆண்டு சந்தித்தபோது, சந்தீப் தனது வங்கி கணக்கை வருமான வரித்துறை முடக்கிவிட்டது என்றும், கணக்கை மீண்டும் இயக்க ₹3 கோடி செலுத்த வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும், தனது பெயரில் பார்சி காலனி மற்றும் சிவாஜி நகர் பகுதியில் தலா ₹5 கோடி மதிப்புள்ள இரண்டு வீடுகள் உள்ளன என்றும் தெரிவித்தார். அதில் சிவாஜி நகர் வீட்டை ₹2 கோடிக்கு விற்பதாகக் கூறி, விற்பனை ஒப்பந்தம், பங்கு சான்றிதழ்கள், நியமனப்பட்டியல் உள்ளிட்ட ஆவணங்களைக் காட்டியுள்ளார்.
தீபிகா, 2019 மார்ச்சிலிருந்து அந்த வீட்டிற்காக தனது நகைகளை ₹49 லட்சத்திற்கு விற்று, மேலும் நண்பர்களிடம் ₹76 லட்சம் கடனாக வாங்கி, மொத்தம் ₹1.25 கோடியை சந்தீப்பிடம் கொடுத்துள்ளார்.
ஆனால், பணத்தை பெற்ற பிறகு, சந்தீப் வீட்டை கொடுக்கவில்லை. மேலும் பணத்தைத் திருப்பித் தருவதையும் மறுத்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜூலை 14-ம் தேதி, தீபிகா சிவாஜி பார்க் போலீசில் புகார் அளித்தார். போலீசார் தற்போது மோசடி மற்றும் நம்பிக்கையை மீறிய குற்றச்சாட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இருப்பினும் சந்தீப்பை இதுவரை கைது செய்யவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மும்பை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “வீடு வாங்கும் போது நம்பிக்கை அல்ல, ஆவணங்களும் சரிபார்ப்பு அவசியம்” என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
