கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தின் புகழ்பெற்ற மஞ்சுநாத் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் முன்னாள் ஊழியர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி ஒரு அதிர்ச்சி புகாரினை தெரிவித்தார். அதாவது இந்த கோவிலை சுற்றி பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் என 100க்கும் மேற்பட்ட பெண்களின் பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை தோண்டி எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அதாவது தன்னுடைய கோவில் மேற்பார்வையாளர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களின் பிணங்களை புதைக்கவும் எரிக்கவும் தன்னை கட்டாயப்படுத்தியதாகவும் இதனால் குடும்பத்தோடு பயந்து போய் தலைமறைவானதாகவும் தற்போது உண்மை உறுத்துவதால் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்ததுடன் தனக்கு பாதுகாப்பு கிடைத்தால் மேற்கொண்டு விபரங்களை கூற தயாராக இருக்கிறேன் என்றார்.
இந்நிலையில் கர்நாடக மாநில பெண்கள் மேம்பாட்டு ஆணையம் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த நபர் கடந்த 1998 முதல் 2014 ஆம் ஆண்டு வரை பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறியுள்ள நிலையில், தற்போது அவர் புகார் கொடுத்துவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் எனவும் தடவியல் குழு அமைக்க வேண்டும் எனவும் முறையாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் இது பற்றி அந்த மாவட்ட டிஜிபி கூறும் போது புகார்தாரர் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுக்கவில்லை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிணங்களை தோண்டி எடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.
மேலும் பிணங்களை தோண்டி எடுக்கும் நாள் நேரம் போன்றவைகள் குறித்து சிறப்பு விசாரணை அதிகாரியை முடிவு செய்வார் என்பதால் நீதிமன்ற உத்தரவு மற்றும் பிற விஷயங்களை வைத்து தான் இந்த விஷயத்தை முறையாக கையாள முடியும் என்று கூறினார். அதே நேரத்தில் புகார் கொடுத்தவர் தலைமறை வாகிவிட்டார் எனவும் அவர் உண்மையில் தலைமறை வாகிவிட்டால் இது ஒரு பொய்யான புகாராக இருக்கக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
