கர்நாடக மாநிலம் மைசூரில் நாகேந்திரா (42)-ரம்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 7 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது. இதில் நாகேந்திரா காய்கறி வியாபாரம் செய்து வந்த நிலையில் தினசரி மது குடித்துவிட்டு வந்து ரம்யாவுடன் தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டிற்கு மது குடித்துவிட்டு வந்த அவர் தன் மனைவியுடன் தகராறு செய்த நிலையில் அவரை சரமாரியாக அடித்து தாக்கியதோடு மீண்டும் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு ரம்யா மறுப்பு தெரிவித்த நிலையில் பணம் தரவில்லை என்றால் குழந்தையை கொன்று விடுவேன் என அவர் மிரட்டியுள்ளார்.

இதனால் ரம்யா கத்தி கூச்சலிட்ட நிலையில் அதற்குள் அவர் தராசு எடைக்கல்லை வைத்து குழந்தையின் மண்டையை உடைத்து கொடூரமாக கொலை செய்தார். இதில் ரத்த வெள்ளத்தில் குழந்தை துடி துடித்து உயிர் இழந்த நிலையில் அதனைப் பார்த்து ரம்யா அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.

இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் நாகேந்திராவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் ஜாமினில் வெளியே வந்த நிலையில் இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததால் தற்போது தீர்ப்பு வெளிவந்துள்ளது. மேலும் அதன்படி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.