தெலுங்கானாவில் பருவமழையுடன் கூடிய காலகட்டத்தில் பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாம்பு மீட்பு பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்கள் தெரிவித்த தகவலின்படி, கடந்த சில மாதங்களில் மட்டும் 7,088 நாகப்பாம்புகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன. பாம்புகள் பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் வரை முட்டையிடும் சூழ்நிலையை நாடி வீடுகள், சுவர்களின் விரிசல்கள் போன்ற இடங்களில் அடைக்கலம் தேடுகின்றன. இதனால்தான் பாம்பு நண்பர்கள் சங்கமான FoSS அமைப்பு மிக்க கவனத்துடன் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அண்மையில் ஜகத்கிரிகுட்டா பகுதியில் நடந்த ஒரு சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்தது. அங்கு 23 நாகப்பாம்புகள் மற்றும் ஒரு பெரிய கண்ணாடி நாகப்பாம்பு, வீட்டு சுவரின் விரிசல்களில் பதுங்கியிருந்தன. இந்த பாம்புகளை மீட்பதற்காக, தன்னார்வலர் ஆதித்ய ஸ்ரீநாத் 12 மணி நேரத்துக்கும் மேலாக பணியாற்றினார். மாலை 7 மணிக்கு தொடங்கிய இந்த பணி, அதிகாலை 3 மணிக்கு வரை நீடித்தது. மறுநாள் மீதி பாம்புகளையும் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

உஸ்மானியா பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர் செல்மேலா ஸ்ரீனிவாசலு கூறுகையில், நாகப்பாம்புகள் ஜனவரி முதல் ஏப்ரல் வரை இனப்பெருக்கம் மேற்கொள்வதும், மார்ச் முதல் ஜூலை வரை முட்டையிடுவதும் வழக்கமானதாம். அக்டோபர் மாதம் வரை இவை முட்டைகளை அடைகாக்கும் காலமாகும். மேலும், மழைக்காலங்களில் தவளைகள், தேரைகள், பூச்சிகள் உள்ளிட்ட பல உயிரினங்களும் அதிகமாக காணப்படுவதால், பாம்புகளுக்கு உணவாகவும், இனப்பெருக்கத்திற்கும் இது ஏற்ற காலமாக அமைக்கிறது என அவர் விளக்கியுள்ளார்.