கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நவமலை என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்கள் கூலி வேலை பார்ப்பதால் வேலைக்காக பக்கத்து கிராமங்களுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் அந்த கிராமத்திருந்து 20- க்கும் மேற்பட்ட மக்கள் அருகில் உள்ள காட்டம்பட்டி கிராமத்திற்கு வாய்க்கால் வேலைக்காக சரக்கு ஏற்றி செல்லும் வாகனத்தில் சென்றனர்.

வாகனம் ஆழியாரை அடுத்த சின்னார்பதி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மழையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.‌ இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த அனைவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் விபத்தில் சிக்கிய அந்த கிராமத்தை சேர்ந்த ராணி மற்றும் திலகராஜ் என்பவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பின்பு படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு சென்ற பிறகும்  ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.