மதுரை மாவட்டம் சிலைமான் அருகே உள்ள இளமனூர் கண்மாய் கரை பகுதியில் பாதி எரிந்த நிலையில் சடலம் இருப்பதாக மக்களிடம் இருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் தடையவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சுமார் 17 வயது மதிக்கத்தக்க ஆண் மாணவரின் சடலமாக இருப்பது உறுதி செய்யப்பட்டதுடன், உடற்கூறாய்விற்காக அந்த சடலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவர் அணிந்திருந்த ஐடிஐ யூனிபார்ம் காலரில் இருந்த டெய்லர் கடை முகவரியை வைத்து, போலீசார் யாருக்கு யாருக்கு அந்த யூனிபார்ம் துணி தைத்தது என விசாரிக்க தொடங்கினர்.

விசாரணையில் அந்த யூனிபார்ம் கலரில் நான்கு பேர் தான் அண்மையில் சீருடை தைத்திருக்கிறார்கள் என டெய்லர் கடை உரிமையாளர் தெரிவித்தார். அதில் மூவர் வீட்டில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதும், மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த பிரசன்னா மட்டும் காணாமல் போனது தெரிய வந்தது.

அவரது பெற்றோர்களிடம் விசாரிக்கச் சென்ற போலீசார், “கல்லூரிக்குப் போவதாக கூறிவிட்டு வெளியே சென்ற பின் வீடு திரும்பவில்லையென்றும், தொடர்ந்தும் தொலைவில் இருப்பதாக” கூறியதும், சந்தேகம் உறுதியடைந்தது. உடலில் இருந்த ஆறு விரல்கள் மற்றும் காலணியை அடிப்படையாக கொண்டு பிரசன்னா தான் இறந்தவர் என பெற்றோர் அடையாளம் காண, போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

தொடர்ந்த விசாரணையில், சம்பவத்தன்று பிரசன்னா நான்கு பேருடன் கண்மாய்க்கரையை நோக்கி சென்றதை அப்பகுதி மக்கள் பார்த்ததாகக் கூறினர். மேலும், அவரது நண்பர்களில் ஒருவரான ராமர் அந்த நாளில் கல்லூரிக்கு செல்லாததும், போலீசாருக்கு புதிய விசாரணை திசையைத் திறந்தது.

இறுதியாக, ராமர் மற்றும் அபினேஷ் ஆகியோர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தங்கள் மகனை தவறான தகவலால் கொலை செய்துள்ளதாக கூறி, பிரசன்னாவின் உறவினர்கள் நீதிமன்றம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விசாரணையின் போது, சில நாட்களுக்கு முன்பு ராமர் மீது மர்ம கும்பல் ஒன்று தாக்கியதற்குப் பிரசன்னாவே காரணம் என தவறான தகவலை நம்பியதாகவும், அதற்குத் தாமோதரன், அசோக் பாண்டி, அபினேஷ் ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து பிரசன்னாவை கண்மாய் பகுதியில் அழைத்துச் சென்று, முதலில் கல்லால் தாக்கி பின்னர் பனைவோலைகளை பயன்படுத்தி உயிருடன் எரித்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

இதன் அடிப்படையில் மூவரும் கைது செய்யப்பட்டு, பிரசன்னாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தவறான தகவலை நம்பியதாலேயே ஒரு இளைய உயிர் பலியாகியது எனத் தெரியவருவதால், இந்த கொடூரம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.