நாமக்கல்லில் திருச்செங்கோடு தாலுகா அருகே உள்ள பகுதியில் நவீன் குமார்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் நாமக்கல் ராமாபுரம்புதூரை சேர்ந்த தன்வர்த்தினி(29) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது. அப்போது தன்வர்தினி பொள்ளாச்சியில் உதவி கலெக்டராக வேலை பார்ப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். ஆனால் திருமணம் முடிந்து சில மாதங்களில் அவர் உதவி கலெக்டராக வேலை பார்க்கவில்லை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து நவீன் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் தன்வர்த்தினியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் அவர் பொள்ளாச்சியில் தங்கி இருந்த வீட்டில் இருந்த மடிக்கணினி உள்ளிட்ட சில ஆவணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆனால் மடிக்கணினியின் கடவுச்சொல் காவல்துறையினருக்கு தெரியவில்லை. இதனால் அவர்கள் அந்தப் பெண்ணை காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இரண்டு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. அந்த விசாரணையில் அவர் குரூப் 1, 2 தேர்வுகளை எழுதியுள்ளார். ஆனால் அவற்றை தேர்ச்சி பெறவில்லை. இதற்காக அவர் போலியாக உதவி கலெக்டர் நியமன உத்தரவு ஆணையையும், அடையாள அட்டையையும் தயாரித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
