2017ஆம் ஆண்டு ஏமனில் தொழில் கூட்டாளியான அப்தோ மெஹ்தியை கொலை செய்ததாக கேரள மாநிலத்தை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில், 2018இல் அவர் கைது செய்யப்பட்டு, 2020ஆம் ஆண்டில் அவருக்கு ஏமன் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
2023 நவம்பரில் ஏமனின் உச்ச நீதித்துறை கவுன்சிலும் அந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. இதற்கிடையில், கடந்த புதன்கிழமை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இது நிமிஷா குடும்பத்திற்கும் ஆதரவாளர்களுக்கும் ஒரு தற்காலிக நிம்மதியாக அமைந்துள்ளது.
இருப்பினும், கொல்லப்பட்ட அப்தோ மெஹ்தியின் சகோதரர் அப்தெல்பத்தா, “அவளை மன்னிக்க முடியாது” என அளித்த வாக்குமூலம், மீண்டும் இந்த வழக்கை உச்ச கட்ட சஸ்பென்ஸில் நீட்டித்துள்ளது. ஏமனில் நடைமுறையில் உள்ள ஷரியா சட்டப்படி, ‘இரத்த பணம்’ (blood money) கொடுத்து, குற்றவாளியை மன்னிக்க கொல்லப்பட்ட நபரின் குடும்பத்தினரே ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் தற்போது மெஹ்தியின் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பதால், பேச்சுவார்த்தைகள் சிக்கலாகி வருகின்றன.
இந்த சூழ்நிலையில், இந்திய அரசு, மதத் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கேரள தொழிலதிபர் எம்.ஏ. யூசுப் அலி இணைந்து, நிமிஷா பிரியாவை மரண தண்டனையிலிருந்து மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தேவையான நிதி உதவியையும் வழங்க தயாராக இருப்பதாக யூசுப் அலி தெரிவித்துள்ளதோடு, ஏமனில் உள்ள அதிகாரிகளுடனும், மெஹ்தியின் குடும்பத்தினருடனும் தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
நிமிஷா 2008இல் தனது குடும்பத்திற்காக ஏமனுக்கு சென்று செவிலியராக பணியாற்றி வந்தார். பின்னர், அவர் சொந்த மருத்துவமனை தொடங்கினார். தொழில் கூட்டாளியான மெஹ்தியுடன் ஏற்பட்ட தகராறில், பாஸ்போர்ட்டை மீட்க அவர் முயன்ற முயற்சியே வாதமாக மாறியது. மேதிக்கு மயக்க மருந்து கொடுத்ததால் ஏற்பட்ட சிக்கலில் அவர் உயிரிழந்ததாக வழக்கு பதிவானது.
நாடு விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டு, கொலைக்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். தற்போது, 8 ஆண்டுகளாக ஏமன் சிறையில் இருப்பவர் நிமிஷா பிரியா. இப்போது மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இறுதித் தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளதுடன், அனைத்து கண்களும் மெஹ்தி குடும்பத்தின் இறுதி முடிவில் தான் உள்ளது.
