தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுகந்தன் அன்பு என்பவர் கடந்த 13ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரபல அல்வா கடையில் 4 கிலோ அல்வா பார்சல் வாங்கியுள்ளார்.
அதை வீட்டிற்கு சென்று பிரித்துப் பார்த்தபோது சிறிய தேள் ஒன்று கிடந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.
மேலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி புஷ்பராஜ் தலைமையிலான குழுவினர் அந்த பிரபல அல்வா கடையில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
மேலும் அல்வாவில் தேள் கிடந்த விவகாரம் குறித்து கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விளக்கம் கேட்டதாகவும் மற்றும் கடைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
