திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் உள்ள பிரபலமான சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் வாங்கிய அல்வா பொட்டலத்தில் தேள் இருந்ததாகக் கூறி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கீழஅழகுநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த சுகந்தன்பு என்ற நபர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 13 ஆம் தேதி, அவர் அங்கு நான்கு கால் கிலோ மற்றும் அரை கிலோ அல்வா பொட்டலங்களை வாங்கி வீட்டிற்கு சென்றார். அதில் ஒன்றை திறந்த போது, அல்வாவுக்குள் தேள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார்.
Consumer alleges scorpion inside halwa bought from popular Santhi Sweets in Tirunelveli. Food safety department inspects the unit and issues notice, seeking explanation. pic.twitter.com/gvAetkGS5j
— Thinakaran Rajamani (@thinak_) July 16, 2025
இந்த விவகாரம் குறித்து சுகந்தன்பு ஒருவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, சாந்தி ஸ்வீட்ஸ் உரிமையாளர்கள் விளக்கம் தர வேண்டும் என்றும், நுகர்வோர் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். வீடியோவை பலரும் பகிர்ந்ததால், இது சாந்தி ஸ்வீட்ஸ் கடையின் தரம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
பொதுமக்களும் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக, திருநெல்வேலி அசல் சாந்தி ஸ்வீட்ஸ் கடையின் உரிமையாளர் சிவசுப்பிரமணியன் விளக்கமளிக்கையில், “அல்வா கவர் தங்களுடையது தான் என்றாலும், எங்கள் தயாரிப்புகளில் இப்படி தேள் உள்ளதற்கான ஏதுமொரு வாய்ப்பும் இல்லை. ‘
சாந்தி ஸ்வீட்ஸ்’ என்ற பெயரில் திருநெல்வேலி முழுவதும் பல கடைகள் இயங்கி வருகின்றன. எங்கள் நிறுவனத்தின் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்துடன் இந்த வீடியோ உருவாக்கப்பட்டிருக்கலாம். இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் உண்மையா அல்லது திட்டமிட்ட சதியா என்பதை அறிய தற்போது அதிகாரிகள் சம்மந்தப்பட்ட கடையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
