திருவண்ணாமலை மாவட்டம் கீழ்வலசை கிராம பகுதியில் அரிய வகை உயிரினம் சுற்றி திரிவதாகவும், ஒரு பெண்ணை தாக்கியுள்ளதாகவும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, இந்த செய்தி முற்றிலும் பொய். 4 விரல்கள் உள்ள கால்கள், நீளமான நகங்கள், ஆட்டின் தலை கொண்ட மனித உருவ புகைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு சமூக வலைதளங்களில் வெளியானது.

இதனை அமெரிக்கா போன்ற நாடுகளில் “வேற்று கிரகவாசி” மற்றும் “ஆடு மனிதன்” என்று பொய்யான செய்தி பரப்பப்பட்டது. தற்போது பரவி வரும் இந்த புகைப்படம் கிராபிக்ஸ் போட்டிக்காக 2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். மேலும் திருவண்ணாமலையில் சுற்றி திரியும் அரிய வகை உயிரினம் என்று இந்தப் புகைப்படத்தை பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் வதந்தி” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.