நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, 37 வயதுடைய தொழிலாளி ஒருவர், இரண்டாவது திருமணம் செய்த மணப்பெண் நகையுடன் தப்பியோடியதால் மன வேதனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், திருமணம் என்ற பெயரில் நாடகம் நடத்தி ஏமாற்றியது தெரியவந்தது. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திடுமல் ராசாம்பாளையத்தைச் சேர்ந்த சிவசண்முகம், விவாகரத்து பெற்ற நிலையில் தாயாருடன் வசித்து வந்தார். புரோக்கர்கள் மூலம் மதுரை ஆலம்பட்டியை சேர்ந்த ‘தீபா’ என்ற பெண்ணை மணப்பெண்ணாக பார்த்து, கோயிலில் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், திருமணத்தின் மூன்றாவது நாளே தீபா, நகைகள், பட்டுப்புடை உள்ளிட்ட பொருட்களுடன் மாயமானார். தொடர்ந்து, அனைத்து புரோக்கர்களின் மொபைல் எண்களும் சுவிட்ச் ஆஃப் ஆகியதை அறிந்த சிவசண்முகம், ஏமாற்றத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.
விசாரணையில், மணப்பெண் தீபா என்பது போலி பெயர் என்பதும், உண்மையில் அவரின் பெயர் ஜோதிலட்சுமி என்பதும், ஏற்கனவே திருமணமானவரும் ஆவார். அவரை 3 நாட்களுக்கு மணப்பெண் வேடத்தில் நடிக்க வைத்து ரூ.30 ஆயிரம் கொடுத்ததாகவும், ₹1.2 லட்சம் புரோக்கர் கமிஷனை 5 பேர் பகிர்ந்துகொண்டதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து, ஜோதிலட்சுமி, முத்துலட்சுமி, கஸ்தூரி, தமிழ்ச்செல்வி, வேல்முருகன், சங்கர் என்கிற நாராயணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தலைமறைவாக உள்ள ராஜா மற்றும் மாரி ஆகியோரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
