திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கோவிலில் புத்தகத் திருவிழா நடைபெற்றது. அதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது “அச்சம் தவிர்” என்ற தலைப்பில் பேசிய அவர் கூறியதாவது, நம் நாட்டு குழந்தைகளுக்கு பொன், பொருளை கொடுப்பதை விட புத்தகங்களை பரிசாக கொடுங்கள்.

நான் இதே பகுதியில் ஆரம்பக் கல்வியை படித்துள்ளேன். இன்றைய கால கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு வாழ்க்கையை எதிர் கொள்வதே அச்சமாக உள்ளது. நகர்ப்புற பகுதியில் இருக்கும் குழந்தைகள் அனைத்து வசதிகளையும் பெறுவதால் அவர்களால் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடிகிறது.

ஆகையால் இன்றைய காலக் குழந்தைகளுக்கு மூன்று, நான்கு மொழிகள் ஆவது கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பிற மாநிலங்களில் இருந்து வருவோரிடம் அச்சமில்லாமல் கலந்துரையாட முடியும்.

மகாகவி பாரதிக்கு 8 மொழிகள் தெரியும். ஆனால் சிறந்த மொழி தமிழ் மொழிதான் எனக் கூறுவார். அதே போன்று தான் பிறமொழி கற்பதால் நம் அடையாளம் ஏதும் மாறப்போவதில்லை. நாம் புத்தகங்களை படித்த பிறகு அதனை மற்றவர்களுக்கு பரிசாக வழங்க வேண்டும் என்பதையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.