பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியில் ஒருவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் உள்ள மருத்துவமனை சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு சிக்னலில் நின்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த சிலர் ஹாரன் அடித்து டெலிவரி ஊழியரை அங்கிருந்து நகருமாறு கூறியுள்ளனர்.

சிவப்பு சிக்னல் போடப்பட்டிருந்த போதிலும் அந்த ஊழியரை அவர்கள் அங்கிருந்து நகரும்படி கூறி தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளனர். ஆனால் அந்த ஊழியர் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதாக கூறினார். இதனால் அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென காரில் இருந்து மூன்று பேர் வெளியே வந்து அந்த டெலிவரி ஊழியரை சரமாரியாக அடித்து தாக்கினர்.

அவர்கள் அனைவரும் சேர்ந்து ஊழியரை கொடூரமாக தாக்கிய நிலையில் பின்னர் காரில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் ரத்தம் வந்து காயமடைந்து சாலையோரத்தில் பரிதாபமாக டெலிவரி ஊழியர் நின்று கொண்டிருந்தார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் விலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் முழுவதும் ஒரு சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி கண்டனங்களை குவித்து வருகிறது.