கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பந்தளம் பகுதியில் அஷ்ரப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய ஒரே மகள் ஹன்னா. இந்த சிறுமி அருகிலுள்ள பள்ளியில் 6 ம் வகுப்பு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிறுமி பக்கத்து வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கிருந்த பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுமியின் கையில் பூனை தன் நகத்தை வைத்து கீறியதால் காயம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் உடனடியாக  அவரை  மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு சிறுமிக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின் சிறுமி வழக்கம் போல பள்ளிக்கு சென்றார். அப்போது சிறுமியின் கழுத்தில் வீக்கம் இருந்ததை கவனித்த பள்ளி ஆசிரியர்கள் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பின் சிறுமியின் பெற்றோர் அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிறுமியின் உடல்நிலை மேலும் மோசமானதால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமி சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.