மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள ராஜ்குஞ்ச் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த சிறுமி காணாமல் போனதாக அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அந்த சிறுமியை 3 இளைஞர்கள் கடத்திச் சென்று அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அடைத்து வைத்துள்ளனர் என்பது தெரிய வந்தது.
மேலும் பல நாட்களாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து கழுவு நீர் கால்வாய் தொட்டியில் வீசி உள்ளனர்.
இது குறித்து அறிந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகள் செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது இந்த கொடூரமான கொலை சம்பவத்தை செய்த நபர்கள், அச்சிறுமியின் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ரஹ்மான் அலி, ஜமீருல், தமீருல் என்ற 20 முதல் 27 வயதுக்கு உட்பட்ட 3 இளைஞர்கள் என்பதை கண்டறிந்தனர்.
இதனை அடுத்து 3 பேரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ரிந்து சுர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி குற்றவாளிகள் 3 பேர் மீதும் உள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அந்த 3 பேர் செய்த கொடூரமான சம்பவத்திற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
