சென்னையில் ஐஐடி 62வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களின் முன்னிலையில் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “நம் நாட்டின் உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களின் பங்களிப்பை நினைத்து பெருமை அடைய வேண்டும் .

நமது நாட்டின் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் ஆபரேஷன் சிந்தூர் பற்றியும் நிச்சயம் கூற வேண்டும். அதாவது பாகிஸ்தானின் 9 பயங்கரவாத இலக்குகளை எந்த இடத்திலும் தவறவிடாமல் திட்டமிட்டபடி துல்லியமாக தாக்கினோம். அதுவும் வெறும் 23 நிமிடங்களில் முழுமையாக முடித்தோம்.

ஆனால் பாகிஸ்தான் இந்தியாவை தாக்கியதற்காக ஏதேனும் சேதம் அடைந்த புகைப்படத்தை காட்ட முடிந்ததா?. வெளிநாட்டு ஊடகங்கள், கடந்த மே 10ஆம் தேதிக்கு முன்பும், பின்பும் எடுக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானத் தளங்களின் புகைப்படங்களை காட்டியது.

ஆனால் பாகிஸ்தான் இதை செய்தது, அதை செய்தது என மட்டுமே வெளிநாட்டு பத்திரிகைகள் தெரிவித்தன இந்தியாவின் உள் கட்டமைப்புகளில் ஏதேனும் சேதம் அல்லது ஏதாவது ஒரு கண்ணாடி உடைந்துள்ள புகைப்படத்தை யாவது காட்டியதா?. நமக்கு பாகிஸ்தானுக்கு உள் நுழைந்து தாக்கும் திறன் உள்ளது.

அதை செய்தும் காட்டினோம். நமது நாட்டின் நாகரீகத்தையும், தேசியத்தையும் இதுவரை உயிர்ப்புடன் வைத்திருக்க நமது முன்னோர்கள் எவ்வளவு இழப்புகள், சிரமங்களை அனுபவித்து இருப்பார்கள் என்பது பற்றி எல்லாம் எனக்குத் தெரியாது.

நாடு என்பது வேறு, அரசு என்பது வேறு என்பதை மட்டும் உணர வேண்டும். இந்தியா ஒரு நாடாக மட்டும் பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ளது. அது அரசாக புதியதாக இருக்கலாம். இன்னும் 22 ஆண்டுகளில் இந்தியா சுதந்திரம் அடைந்த 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் தருவாயில் உள்ளது.

அப்போது நீங்கள் எல்லாம் மிகப்பெரிய தொழில் நுட்ப வாழ்க்கையின் உச்சத்தில் இருப்பீர்கள்”இவ்வாறு மாணவர்களுக்கு உத்வேகம் அளித்து பேசினார்.