நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் முறையில் கட்டண வசூலிக்க FASTag கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த முறையை தவறாக பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) கடும் நடவடிக்கையை அறிவித்துள்ளது.
குறிப்பாக, வாகன கண்ணாடியில் ஒட்டாமல், FASTag ஐ கையில் எடுத்துச் சென்று சுங்கச்சாவடியில் காட்டும் நடைமுறை, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதாகக் கூறி, இது இனிமேல் அனுமதிக்கப்படாது எனத் திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது, FASTag என்பது வாகன கண்ணாடியில் கோடெடுப்புப் பகுதியின் பின்புறத்தில் சரியாக ஒட்டப்பட்டிருப்பது கட்டாயம். ஆனால், சிலர் அதை வாகனத்தில் ஒட்டாமல் வைத்திருக்க, சுங்கச்சாவடியில் கையில் எடுத்துச் சென்று ஸ்கேன் செய்வது வழக்கமாகி வருகிறது.
இது பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது மட்டுமல்லாமல், சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து மந்தம் ஏற்பட காரணமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சரியாக ஒட்டப்படாத FASTag-களும், கையில் எடுத்துச் செல்பவர்களின் FASTag-களும் Blacklist செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளிவந்த பிறகு, பொதுமக்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் FASTag பயன்பாட்டில் முக்கியத்துவம் காட்ட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். Blacklist செய்யப்பட்ட FASTag-கள், சுங்கச்சாவடிகளில் சோதனையில் சிக்கினால், கூடுதல் அபராதம் வசூலிக்கப்படும் என்றும், தவிர, புதிய FASTag பெறும் பணியும் வாகன உரிமையாளரின் மீது விழும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, FASTag ஒட்டும் விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு வாகன உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்படுகிறார்கள்.
