ஒவ்வொரு கிராமங்களிலும் பஞ்சாயத்து கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோன்று சமீபத்தில் ஒரு பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் ரூபாய் 85 ஆயிரத்திற்கு நொறுக்கு தீனிகள் மட்டுமே வாங்கியதாக உள்ள கணக்கு பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

அதாவது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பாத்வாகி கிராமத்தில் பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் உட்பட அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் 30 பேர் கலந்து கொண்டுள்ளனர். அந்தக் கூட்டத்தில் வந்திருப்பவர்களுக்கு நொறுக்கு தீனிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அந்தக் கூட்டத்திற்கு செலவிடப்பட்ட கணக்கு வழக்குகள் குறித்த பட்டியலில் ரூபாய் 85 ஆயிரத்திற்கு நொறுக்குத்திணிகள் வாங்கியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 6 கிலோ முந்திரி, 3 கிலோ உலர் திராட்சை, 3 கிலோ பாதாம், 9 கிலோ ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை பழங்கள், 5 டஜன் வாழைப்பழம், 30 கிலோ மிக்ஸர், பூந்தி, இனிப்பு வகைகள் முதலியன எழுதப்பட்டிருந்தது.

இது குறித்த பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து சமூக வலைதள நெட்டிசன்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் செலவிடப்படும் பணம்தானே என்ற நோக்கத்தில் வரைமுறை இல்லாமல் செலவிடுவது குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.