ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி – புதுக்குடி மீனவ கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாட்டுப் படகு ஒன்றை சொந்தமாக வைத்துள்ள நிலையில் கடலுக்கு சென்று மீன்பிடித்து தனது பிழைப்பை நடத்தி
வருகிறார். இந்நிலையில் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக தனது நாட்டுப்படகில் சென்ற போது அதிர்ஷ்டவசமாக 5 டன் எடையுள்ள பெரிய பாறை மீன்கள் அவரது வலையில் சிக்கியது.

இதனைக் கண்டு மகிழ்ச்சியடைந்த மீனவர் ஆச்சரியத்தில் உறைந்தார். தனது வலையில் சிக்கிய மீன்களை கரைக்கு கொண்டு சேர்ப்பதற்காக அருகில் இருந்த மீனவர்களை உதவிக்கு அழைத்தார். அவர்கள் 3 நாட்டுப் படகுகள் மூலம் கண்ணன் வலையில் சிக்கிய மீன்களை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து வலையில் சிக்கிய 5 டன் எடையுள்ள மிகப்பெரிய பாறை மீன்களின் மதிப்பு ரூபாய் 15 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதிக அளவிலான பாறை மீன்கள் நாட்டுப் படகு மீனவர்களின் வலையில் கிடைப்பது மிகவும் அரிதான நிலையில் ஒரே நாளில் தனது வலையில் 5 டன் மீன்கள் சிக்கியதால் மீனவர் கண்ணன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.