சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கான்சு மாகாணத்தின் தியான்ஷூய் நகரத்தில் ஹெஷி பெய்க்சின் எனும் பெயரில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் பள்ளியில், குழந்தைகளுக்கான உணவில் உணவு பொருட்களுக்கு பதிலாக “பெயிண்ட்” (வண்ணம் சேர்க்கும் ரசாயனம்) கலந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் உணவை பார்ப்பதற்கு அழகாக, வண்ணமயமாக காட்டவே, சமையல் பணியாளர் தலைமை வழிகாட்டுதலின் கீழ் பெயிண்ட் கலந்து உணவு தயாரித்ததாக கூறப்படுகிறது. இதில் பெயிண்டில் அதிக அளவில் காணப்படும் “காரீயம்” (Chromium) என்ற கனிம உலோகம், குழந்தைகளின் ரத்தத்தில் அதிக அளவில் கலந்து, உடல்நலம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 251 மாணவர்களில் 233 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 201 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கேக், கார்ன் ரோல் போன்ற உணவுகளிலேயே அதிக அளவு காரீயம் கலந்திருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது நீண்டகால உடல் பாதிப்புகளையும், ஆபத்தான உளவியல் தாக்கங்களையும் ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த 3 மாதங்களாக இதுபோன்று பெயிண்ட் கலந்த உணவுகள் வழங்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

“>

 

இந்த விவகாரத்தில் பள்ளியின் முதல்வர் மற்றும் உணவு பொறுப்பாளர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், வருமானத்தை உயர்த்தவும் “வண்ணமய உணவுகள்” என்ற பெயரில் பெயிண்ட் கலப்பதற்குத் திட்டமிட்டுதான் மேற்கொண்ட நடவடிக்கையென முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து, சீனாவில் மீண்டும் உணவு பாதுகாப்பு முறைகள் குறித்த கடும் விவாதம் எழுந்துள்ள நிலையில், தியான்ஷுய் நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2008-ஆம் ஆண்டு பால் பவுடரில் மெலமைன் கலத்தால் 6 குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சியை நினைவுபடுத்தும் வகையில், இச்சம்பவமும் நாட்டை உலுக்கியுள்ளது.