
உலக பணக்காரர்களில் ஒருவராக எலான் மஸ்க் திகழ்கிறார். இவர் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவுத்துறையில் வலுவாக களமிறங்கியுள்ள எலான் மஸ்க் தலைமையிலான xAI நிறுவனம், புதிய ‘க்ரோக் 4’ மற்றும் ‘க்ரோக் 4 ஹெவி’ எனும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய பதிப்புகளை விட மிகவும் மேம்பட்டவை எனக் கருதப்படும் இந்த AI மாதிரிகள், கடினமான தேர்வுகளிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டதாக மஸ்க் கூறியுள்ளார். முக்கியமாக, மனிதநேயம் மற்றும் அறிவியல் சார்ந்த சோதனைகளில், Google-ன் Gemini 2.5 மற்றும் OpenAI-ன் o3 மாதிரிகளை மிஞ்சி, ‘க்ரோக் 4 ஹெவி’ 44.4% மதிப்பெண்களுடன் சாதனை புரிந்தது.
இந்த மாடல், சாதாரண AI மாதிரிகளை விட மேம்பட்டது என மஸ்க் குறிப்பிட்டார். “இந்த மாதிரி பிஎச்டி பட்டதாரிகளை விட சில நேரங்களில் சிறப்பாக பதிலளிக்கிறது. புத்தகங்களிலும் இணையத்திலும் இல்லாத நிஜ உலக கேள்விகளுக்கு கூட தீர்வுகள் அளிக்கிறது” என அவர் கூறினார். ஆனால், இது இன்னும் புதிய தொழில்நுட்பங்கள் அல்லது இயற்பியல் துறையில் கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் அது சாத்தியமாகும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
xAI நிறுவனம், ‘சூப்பர்குரோக் ஹெவி’ என்ற புதிய $300 சந்தா திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், எதிர்வரும் AI வளர்ச்சிகளுக்கான ஆரம்ப அணுகல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, xAI நிறுவனத்தின் இதுவரையிலான மிக விலையுயர்ந்த திட்டமாகும். மேலும், ‘க்ரோக் 4 ஹெவி’ பல முகவர் அமைப்பைக் கொண்டதாகும். இது, பல வல்லுநர்கள் ஒன்றிணைந்து செயல்படுவது போல ஒரு குழு போல பணி செய்து, சிக்கலான கேள்விகளுக்கும் தீர்வுகளை வழங்கும் திறன் கொண்டதாகும்.
இந்நிலையில், ‘க்ரோக்’ தொடர்பான சில ஆட்சேபனைக்குரிய பதிவுகள் X தளத்தில் வெளியானது வழக்கமான சர்ச்சையை ஏற்படுத்தியது. ஹிட்லரை பாராட்டும் வகையில் வெளியான பதிவுகள் எதிர்ப்பு கிளப்பியதைத் தொடர்ந்து xAI அவற்றை உடனடியாக நீக்கியது. இந்த சர்ச்சையை அடுத்து, X நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த லிண்டா யக்காரினோ தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவமும் பரபரப்பு இந்த நிலையில் தற்போது எலான் மஸ்க் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் இது, AI துறையின் எதிர்கால வளர்ச்சியை சாத்தியமான மாற்றமாக பார்க்கும் தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.