
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் ஸ்டீபன் ராஜ் கோமதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர். ஸ்டீபன் ராஜ் திருநின்றவூர் கட்சியின் நகர செயலாளராக செயல்பட்டு வருகிறார். அவருடைய மனைவி கோமதி திருநின்றவூர் நகராட்சியின் 26 ஆவது வார்டு கவுன்சிலர் ஆவார். இந்நிலையில் கோமதிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு நபருடன் பழகி வந்துள்ளார். இவர்களுக்கிடையேயான பழக்கம் அதிகமான நிலையில் அதனையறிந்த கணவர் ஸ்டீபன் ராஜ் கோமதியிடம் எச்சரித்துள்ளார். ஆனால் கோமதி கேட்கவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்டீபன் ராஜின் தம்பி அஜித் என்பவர் அவருடைய வீட்டிற்கு வந்தார். அப்போது கோமதியின் மொபைல் போனிலிருந்த புகைப்படத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அதனை தனது அண்ணனிடம் காண்பித்தார். அதில் கோமதியும் இன்ஸ்டாகிராம் நபரும் ஒன்றாக இருந்த புகைப்படம் இருந்தது. இதனால் கோபமடைந்த அவர் தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதோடு அவரை அதே பகுதியில் உள்ள அவரது சித்தி வீட்டிற்கு அழைத்துச் சென்று கோமதியின் தகாத உறவை பற்றி கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அவர் சென்ற சற்று நேரத்தில் கோமதியும் வீட்டில் இருந்து வெளியேறி சாலையில் நடந்த சென்று கொண்டிருந்தார். அதனை பார்த்த ஸ்டீபன் ராஜ் தனது தம்பியிடம் கோமதி எங்கே செல்கிறாள் என்று பார்த்துக்கொள் என கூறினார். அதன்படி அஜித் அவரது உறவினரான ஜான்சன் என்பவரும் இரு சக்கர வாகனத்தில் கோமதியை பின் தொடர்ந்தனர். அப்போது கோமதி செக் போஸ்ட் அருகே காரில் நண்பர்களுடன் நின்று கொண்டிருந்த இன்ஸ்டாகிராம் நபரின் அருகே சென்றார். இதனைப் பார்த்து கோபமடைந்த அஜித் அவரது ஆண் நண்பரிடம் சென்று தகராறு . உடனடியாக அந்த நபர் அவரது நண்பர்களுடன் அங்கிருந்து சென்று விட்டார். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்டீபன் ராஜ் தனது மனைவியை ஆட்டோவில் ஏற்றுக் கொண்டு வீட்டிற்கு சென்றார். அப்போது “இதுபோல் செய்யாதே… நமக்கு குழந்தைகள் இருக்கிறார்கள்” என்று கூறினார். ஆனால் கோமதி தனது கணவர் பேசுவதை காது கொடுத்து கேட்கவில்லை. இதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்ததும் கோமதி வீட்டின் உள்ளே செல்லாமல் ரயில்வே சுரங்கப்பாதை நோக்கி நடந்து சென்றார். அந்த சமயத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ஸ்டீபன் ராஜ் தான் வைத்திருந்த அறிவாளால் கோமதியை சரமாரியாக வெட்டினார். இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கோமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த ஸ்டீபன்ராஜ், அவரது தம்பி அஜித், உறவினர் ஜான்சன் ஆகியோரை தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர். மேலும் கோமதியின் ஆண் நண்பரை காவல் துறையினர் தீவிரமாக தேடிவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.