
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற வாலிபரை நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தனிப்படை காவல்துறையினர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் நீதி கிடைக்கும் வரை அதிமுக உங்களுக்கு துணையாக நிற்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி எடப்பாடி பழனிசாமி பேசியதை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ” திருப்புவனம் கொடூரம் பற்றிய தகவல் வந்ததுமே, குற்றம்சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாகச் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்; விரைந்து கைதும் செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதோடு, இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும் என உறுதியளித்துள்ளார். வழக்கும் உடனடியாக சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி வழங்கியதோடு மட்டுமின்றி அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இரண்டே நாட்களில் சட்ட ரீதியான இத்தனை நடவடிக்கைகள் எடுப்பதும் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் நிகழாதவை; இன்று அதை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
உங்கள் இருண்டகால ஆட்சியில் நடைபெற்ற, சாத்தான்குளம் சம்பவத்தில் ஜெயராஜ் – பென்னீக்ஸ் இருவருமே உடல்நலக் குறைவால் இறந்தார்கள் என்றும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் எனவும் ஆணவத்தோடும், அலட்சிய மனப்பான்மையோடும் பேசியவர் தானே நீங்கள்? அப்போது நீதி எங்கே போனது? கூவத்தூருக்கா? கொஞ்சமேனும் உங்களுக்கு மனசாட்சி இல்லையா?
உங்களின் கண்துடைப்பு நாடகங்களை யாரும் நம்பமாட்டார்கள்; இனியாவது நிறுத்திக் கொள்ளலாம்; நீதியை நிலைநாட்ட மாண்புமிகு முதலமைச்சர் இருக்கிறார்..!! என்று தெரிவித்துள்ளார்.
https://x.com/arivalayam/status/1940447771888333062?t=Lyq1o9qxHHRLk4nMwILJng&s=19