பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவதேஷ் குமார் என்ற நபர் எழும்பியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் இரவில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் எலி ஒன்று அவரது காலை கடித்துவிட்டது. ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவதேஷ் குமாருக்கு தற்போது எலி கடித்த சம்பவம் தொடர்பாக புகார் வெளியான நிலையில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் இந்த சம்பவத்தை கண்டித்தும், மாநில சுகாதார துறையின் அலட்சியத்தை குற்றம் சாட்டியும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “மாநிலத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் நோயாளியின் காலை எலி கடிக்கிறது. இதற்கு முன்பு ஒரு இறந்த உடலின் கண்களை எலி கடித்தது. ஆனால் அதற்கு இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை. எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து நோயாளி ஒருவரை எலி கடித்தது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மங்கள் பாண்டே எதிர்க்கட்சியை குறை கூறிய நிலையில் சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் டாக்டர் லஷ்மி பிரசாத் நோயாளிக்கு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.