கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஆத்தங்கரை மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தனர். இவர்கள் மாணவரை சரமாரியாக அடித்து பீர் பாட்டினால் மண்டையை உடைத்து அரிவாளால் வெட்டினர். இவர்கள் அந்த மாணவனை கொடூரமாக தாக்கிவிட்டு பின்னர் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றனர்.

அந்த மாணவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய வாலிபர்களில்  ஒருவரின் காதலியை சம்பந்தப்பட்ட மாணவன் கேலி செய்துள்ளான். இதனால் தான் அவர்கள் அனைவரும் சேர்ந்து மாணவனை அரிவாளால் வெட்டியது தெரிய வந்தது. இந்த தாக்குதல் நடத்திய அனைவரும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அனைவரையும் போலீசார் தற்போது வலைவீசி தேடி வருகின்றனர்.