
ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் என்னும் பகுதியில் குமார்(35)- பாண்டி செல்வி(23) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் 4 வயதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு வயதில் இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று சம்பவ நாளில் குமார் தன் மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
இதை தொடர்ந்து அவருடைய மனைவி ஒரு குழந்தையை வீட்டில் தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு 4 வயது ஆண் குழந்தை மற்றும் ஒரு வயது ஆண் குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது குமார் தன் மனைவியின் மீதுள்ள கோபத்தால் தூங்கி கொண்டிருந்த குழந்தையை வேகமாக ஆட்டினார். அந்த குழந்தையின் தலை சுவரில் மோதி காயம் அடைந்தது. பின்னர் குழந்தை மயங்கி விழுந்த நிலையில் வீடு திரும்பிய மனைவியிடம் குழந்தை பேச்சு மூச்சில்லாமல் இருப்பதாக குமார் கூறினார். ஆனால் குமாரின் பேச்சில் அவருடைய மனைவிக்கு நம்பிக்கை இல்லாததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இதை தொடர்ந்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் காவல்துறையினர் குமாரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.