பொது இடங்களுக்கு செல்லப்பிராணிகளை அழைத்து செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆனால் சில உரிமையாளர்கள் கவன குறைவாக இருப்பதால் நாய்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்ணில் படுபவர்களை கடித்து ஆபத்தை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் 23 இனங்களை சேர்ந்த நாய்களை வளர்க்க அரசு தடை விதித்தது.
இதனையடுத்து உரிமம் பெறாமல் நாய் வளர்த்தால் உரிமையாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாய் வளர்ப்பவர்கள் தங்கள் நாய்களை சாலையில் அழைத்துச் செல்லும்போது வாய்மூடி கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் தங்கள் வளர்ப்பு நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளரே முழு பொறுப்பு. இது போன்ற பல விதிமுறைகள் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பொது இடங்களுக்கு நாய்களை அழைத்துச் செல்லும்போது அதற்கு உரிய வகையில் கட்டாயம் வாய் கவசம் அணிவிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
