உத்திரபிரதேசம் மாநிலம் மீரட்டில் 30 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த 2023-ஆம் ஆண்டு 45 லட்சம் செலவில் பெண்ணிற்கு அவரது தந்தை திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும் வரதட்சணையாக தங்க நகைகள், ஒரு கார், 15 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொடுத்துள்ளார். இந்த நிலையில் திருமணமான நாளிலிருந்து கூடுதல் வரதட்சனை கேட்டு கணவரின் குடும்பத்தினர் அந்த பெண்ணை சித்திரவதை செய்துள்ளனர்.

2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கூடுதல் வரதட்சனை வாங்கி வா என கூறி அந்த பெண்ணை வீட்டை விட்டு துரத்தி விட்டனர். அதன் பிறகு ஊர் மக்கள் சமரச பேச்சு வார்த்தை நடத்தி பெண்ணை அவரது மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகும் கணவர் குடும்பத்தினர் பெண்ணை விடாமல் சித்திரவதை செய்துள்ளனர்.

இந்த நிலையில் கூடுதல் வரதட்சனை கொடுக்காத ஆத்திரத்தில் கணவர் குடும்பத்தினர் அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய்க்கான ஊசியை போட்டுள்ளனர். இதனால் பெண்ணின் உடல்நலம் மோசமானது. இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த புகாரில் கடந்த மே மாதம் என் மகளுக்கு அவரது மாமியார் எய்ட்ஸ் தொற்றுள்ள ஊசியை செலுத்தியுள்ளார்.

இதனால் என் மகளின் உடல் நலம் மோசமானது. பரிசோதனை செய்தபோது என் மகளுக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே வரதட்சணை கேட்டு எனது மகளுக்கு எய்ட்ஸ் ஊசி போட்ட குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.