
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேமங்கலம் கிராமத்தில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்தார். இவரது நெருங்கிய நண்பர் தமிழரசன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துக்குமார் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து முத்துக்குமாரின் தந்தை முருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு முருகன் தனது விவசாய நிலத்தில் கிடைத்த லாபம் 8 லட்ச ரூபாய் பணத்தை தனது மகனின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். இதனையடுத்து குடும்ப செலவிற்கு பணம் தேவைப்பட்டதால் முத்துக்குமார் தனது நெருங்கிய நண்பரான தமிழரசனுடன் வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தமிழரசன் முத்துக்குமாரிடம் கையெழுத்து வாங்கி அந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்து கொண்டார்.
இதுபற்றி அறிந்த முத்துக்குமார் அந்த பணத்தை கேட்டுள்ளார். ஆனால் 4 மாதங்களாக அந்த பணத்தை கொடுக்காமல் தமிழரசன் காலம் தாழ்த்தியுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று பணம் பற்றி கேட்டபோது முத்துக்குமரனுக்கும் தமிழரசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் கோபமடைந்த தமிழரசன் முத்துக்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் இரும்பு கம்பியால் தலையில் அடித்ததால் அங்கேயே முத்துக்குமார் உயிரிழந்தார். பின்னர் தனது நிலத்திற்கு அருகே இருக்கும் ஆற்றங்கரை ஓரமாக முத்துக்குமாரின் உடலை புதைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல தமிழரசன் வீட்டிற்கு வந்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.