மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில் ரயில்களில் ஏராளமான பயணிகள் பயணம் செய்கிறார்கள். இந்த ரயில்வே நிலையத்தில் மகாத்மா காந்தியின் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தேசத்தந்தையான மகாத்மா காந்தியின் சிலையை கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஒரு வாலிபர் திடீரென உடைக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வாலிபர் காந்தி சிலையை உடைப்பதை பார்த்த பயணிகள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் வருவதற்கு முன்பாகவே அங்கிருந்த பயணிகள் வாலிபரை தடுத்து நிறுத்தி அவரை பிடித்தனர். பின்னர் போலீஸ் வந்ததும் அவர்கள் வாலிபரை ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சுராஜ் சுக்லா (35) என்பவர் தான் சிலையை உடைக்க முயன்றது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்த நிலையில் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
