சென்னை மாவட்டத்தில் உள்ள பொன்னேரி நகராட்சியில் கர்நாடகாவைச் சேர்ந்த ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரவியின் மனைவி பொம்மிமா கர்நாடகாவிற்கு சென்று விட்டார். நேற்று பொம்மிமா தனது கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் ஆட்டோ டிரைவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
உடனே ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு சென்றார். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ரவி படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் ரவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவர் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
