மைசூரில் குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஒரு தம்பதியினர் நீதிமன்றம் வரை சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை பிறந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தாய் வைக்க விரும்பிய பெயர் தந்தைக்கு பிடிக்கவில்லை. தந்தை வைக்க விரும்பிய பெயர் தாய்க்கு பிடிக்கவில்லை.
இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் குழந்தையின் தாய் நீதிமன்றத்தை நாடியுள்ளார். நீதிமன்ற தரப்பில் பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. அனைத்து பெயர்களையும் அவர்கள் நிராகரித்த நிலையில் கடைசியாக நீதிபதி ஆரியவர்தன் என்ற பெயரை குழந்தைக்கு சூட்டினார். பின்னர் நீதிபதி குழந்தைக்கு இனிப்பு ஊட்டினார். நீதிமன்றத்திலேயே அந்த தம்பதியினர் மாலை மாற்றி தங்களுக்குள் இருந்த மனக்கசப்பை விளக்கி, பிள்ளைக்காக ஒற்றுமையாக வாழ்வோம் என உறுதி அளித்தனர்.
