தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கேத்து ரெட்டிபட்டி கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜேசிபி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் காண்ட்ராக்ட் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரனிடம் வேலை பார்த்து வந்துள்ளார். பிரபாகரன் ராஜகுமாரை விழுப்புரம் ரயில்வே காண்டாக்ட் பணிக்காக அனுப்பி வைத்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி உடல்நல குறைவால் ராஜ்குமார் இறந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ராஜ்குமாரின் மனைவி ரஞ்சிதா விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் எனது கணவர் ராஜ்குமார் பிரபாகரன் என்பவரிடம் ஜேசிபி ஓட்டுநராக வேலை பார்த்தார். ரயில்வே காண்ட்ராக்ட் வேலைக்காக எனது கணவரை பிரபாகரன் விழுப்புரத்திற்கு அனுப்பி வைத்தார். 17ஆம் தேதி இரவு 7 மணிக்கு எனது கணவரை தொடர்பு கொண்ட போது அவர் செல்போனை எடுக்கவில்லை. அவருடன் வேலை பார்க்கும் ஆப்ரேட்டர் மோகன் என்னை தொடர்பு கொண்டு எனது கணவருக்கு உடம்பு சரியில்லாத விஷயத்தை கூறினார். மேலும் என்னிடம் நீ மட்டும் தனியா வா… பிரபாகரன் உன்னை காரில் அழைத்து வருவார் என கூறினார்.

எனது மாமனார் மாமியார் அவர்களுக்கு தெரிவிக்காமல் வர சொன்னார். உடல் நலம் சரியில்லாததால் கணவரை அழைத்து வரவேண்டும் என பதறி அடித்துக் கொண்டு விழுப்புரம் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு அவர் இறந்து கிடந்தார். அவரது முகம், தலை, கை, கால், உடல் பகுதியில் காயம் இருந்தது. பிரபாகரன் அவரது கூட்டாளிகள் இணைந்து எனது கணவரை தாக்கியுள்ளனர். உடற்கூறு ஆய்வு செய்து உண்மையை கண்டுபிடித்து எனக்கு நீதி வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.