தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெறும் நிலையில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற இடத்தில் மாநாடு நடைபெறும் நிலையில் காலை முதலே தொண்டர்கள் குவிய ஆரம்பித்துவிட்டனர். நடிகர் விஜய்யும் நேற்றே விக்கிரவாண்டிக்கு சென்று விட்டார். இன்று மாலை 4 மணியளவில் மாநாடு நடைபெறும் நிலையில் காலை முதலே தொண்டர்கள் படையெடுத்து திரண்டு வருகிறார்கள். இந்த மாநாட்டுக்கு ஏராளமானோர் வருவார்கள் என்பதால் தேசிய நெடுஞ்சாலைகளில் போலீசார் ஜீரோ டிராபிக் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டிக்கு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதோடு பிற வாகனங்கள் வேறு வழியில் மாற்றி அனுப்பப்படும்.
இந்நிலையில் ஜீரோ டிராபிக் முறைக்காக சுங்க சாவடிகளில் கூட்டம் ஏற்படக்கூடாது என்பதற்காக தற்போது உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி மற்றும் ஓங்கூர் ஆகிய 3 சுங்கச்சாவடிகளில் மட்டும் வாகனங்களுக்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று விக்கிரவாண்டியில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் வாகனங்களுக்கு மட்டும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இன்று முதல் மாநாடு நடைபெறும் இடத்தை நோக்கி செல்லும் நிலையில் டிராபிக் ஏற்படும் என்பதால் தற்போது இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் தொண்டர்கள் மத்தியிலும் தமிழக வெற்றிக்கழகத்தினர் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
