அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், வணக்கம். இந்த விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை பற்றி நான் அறிக்கை மூலமாகவும், ஊடகப் பேட்டிகள் மூலமாகவும், சட்டமன்றத்திலும் மக்களின் கவனத்திற்கு பலமுறை கொண்டு வந்திருக்கின்றேன். இப்போது இருக்கின்ற இந்த பிரச்சனையின் வீரியம் உணர்ந்து நான் இந்த காணொளி மூலமாக உங்களிடம் பேசுகிறேன். திமுகவின் அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ஜாபர் சாதிக் சர்வதேச அளவில் போதை பொருள் மாஃபியாவாக வளர்ந்து இன்றைக்கு உலகம் முழுவதும் தேடப்படும் குற்றவாளியாக இருக்கின்ற செய்தி உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களை சீரழிக்கும் இந்த போதை பொருள் புழக்கம் பற்றி நான் மட்டும்தான் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக தொடர்ந்து பேசி வருகிறேன். இந்த விடியா திமுக அரசை எச்சரித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசி வருகிறேன். இது நம் அனைவரது வாழ்வியலை ஒட்டுமொத்தமாக பாதிக்கின்ற ஒரு விஷயம். இதில் அதிகமாக பாதிக்கப்படுவது நமது குழந்தைகளான பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களும், ஐடி துறையில் வேலை பார்க்கும் இந்த தலைமுறை இளைஞர்களும் தான். ஒரு பெற்றோராக நாம் இந்த பிரச்சனையை குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும். ஒரு தந்தையாகவோ, தாயாகவோ நம்முடைய முதல் மற்றும் முக்கியமான கடமை நம்முடைய பிள்ளைகளுக்கு நல்லதோர் எதிர்காலத்தை அமைத்து தருவதுதான். ஆளும் திமுக கட்சி நிர்வாகி, அதுவும் திரு.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்கு நெருக்கமாக இருக்கின்ற ஒருவர் போதை பொருள் மாஃபியா தலைவராக இருக்கின்றார் என்றால் ஸ்டாலின் அவர்களே தமிழ்நாட்டை அகல பாதாளத்திற்கு அழைத்து செல்கிறீர்கள்.
நேற்று ஒரே நாளில் மட்டும் காலையில் மதுரையிலும் போதை பொருள் பறிமுதல், மதியம் உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர்களுக்கான இனிப்போடு கலந்திருந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல், மாலை சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டிருந்த போதைப்பொருள் பறிமுதல் என தொடர்ச்சியாக போதை பொருள் புழக்கம் குறித்த செய்திகள் தான். நேற்று ஒரே நாளில் மட்டும் 180 கோடி ரூபாய் அளவிற்கு போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது நாம் வாழ்வது தமிழ்நாடா? அல்லது போதை பொருள் மொத்த விற்பனை கிடங்கா? என்ற கேள்வி ஏற்படுகிறது.
தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள போதை பொருட்கள் கடலளவு. ஆனால் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதை பொருள் கையளவு என பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள் புழக்கத்தையும், இதனையும் தடுக்க நடவடிக்கை எடுக்காமல், கைகட்டி வேடிக்கை பார்த்து சர்வதேச போதை பொருள் மாஃபியாவாக இருக்கும் விடியா திமுக ஆட்சி இனியும் தொடர்ந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. நாளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இளைஞர்களும், பெண்களும், பொதுமக்களும் ஒன்று கூடி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். 4ம் தேதி ஆர்ப்பாட்டத்துடன் இது நிற்கப் போவதில்லை. இந்த போதை பொருள் மாஃபியா கும்பல் முழுவதுமாக கைது செய்யப்பட்டு தமிழ்நாட்டில் கடைசி துளி போதை பொருள் ஒழியும் வரை எங்களுடைய போராட்டம் நிச்சயம் தொடரும்.
நான் இப்போது ஒரு தந்தையாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உங்களிடம் பேச விரும்புகிறேன். அறியாத வயதில் தெரியாமல் செய்யும் தவறு வாழ்க்கை முழுவதும் சீரழித்து விடும். அதனால் நாம் பிள்ளைகளை குறிப்பாக பள்ளியில் கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் இதுபோன்ற போதைப்பொருளில் இருந்து காப்பாற்ற வேண்டியது நம்முடைய கடமை. மாணவர்களும், இளைஞர்களும் போதைப் பொருளுக்கு அடிமையாகாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். பெற்றோர்கள் அனைவரும் உங்கள் பிள்ளைகளுக்கு இது போன்ற போதை பொருட்களால் ஏற்படக்கூடிய தீமைகள், பாதிப்புகளை விழித்து சொல்ல வேண்டும். நம் கழகத்தின் மாணவர் அணி, இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்கள் உங்களை சுற்றி எங்கேயும் இது மாதிரியான போதை பொருள் புழக்கம் தெரிந்தது என்றால் உடனடியாக காவல்துறையிடம் புகார் தெரிவியுங்கள்.
தமிழ்நாடு காவல்துறையின் மீது எனக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. புகார் அளிப்பவர்களின் அடையாளத்தை பாதுகாத்து போதைப் பொருட்களை ஒழிக்க இனியாவது தீவிரமாக செயல்படுங்கள் என்று காவல்துறை அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன். இந்த விடியா திமுக ஆட்சிக்கு வந்த போதே இந்த போதை பொருள் புழக்கம் விதையாக இருந்த சமயத்திலேயே நான் தொடர்ந்து எச்சரித்தேன். இன்றைக்கு திமுகவை சேர்ந்த நிர்வாகிகளே டிரக் மாஃபியாவாக வளர்ந்து இருக்கின்றார்கள்.
இன்றைக்கு தமிழ்நாட்டில் ரயில் பெட்டிகள் முதல் கார்ப்பரேஷன் குப்பைகள் வரை எங்கு திரும்பினாலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் போதைப்பொருட்கள் பொட்டலம், பொட்டலமாக கண்டெடுக்கப்படுகிறது. தமிழ்நாடு மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் உள்ளார்ந்த அக்கறையோடு கேட்டுக்கொள்ளும் ஒரே விஷயம் SAY NO TO DRUGS. தமிழர் உரிமை காப்போம். தமிழ்நாட்டை போதைப் பொருளிலிருந்து மீட்போம். நன்றி வணக்கம்” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும் நாளை, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் @AIADMKOfficial சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.… pic.twitter.com/8AJ4ejw5JO
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) March 3, 2024
