தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகையை வழங்குவதற்கான முன்னேறுபாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கிராம நிர்வாக அதிகாரிகள் வருவாய் அலுவலர் மற்றும் தாசில்தார் ஆகியோர் வெள்ளத்தால் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட்டு அளித்த தகவலின் அடிப்படையில் தற்போது மாவட்ட ஆட்சியர்கள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர்.

இந்த நிலையில் 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் யார் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்த விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் அனைத்து வட்டங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்களுக்கும் வழங்கப்படும்.

அதனைப் போலவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுவதும் ஸ்ரீபெரும்புதூர் முழுவதும் வழங்கப்படும். இந்த நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்ட மத்திய அரசு அதிகாரிகள், வருமான வரி செலுத்துபவர்கள், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் தங்களுடைய விவரங்களை வங்கி கணக்கு தகவலுடன் அருகே உள்ள ரேஷன் கடைகளில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.