அதிக வட்டி கேட்டு நிதி நிறுவனத்துக்குள் புகுந்து தொழிலாளி தீக்குளிக்க முயற்சித்ததை தொடர்ந்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி என்பவர் மின்வாரிய அலுவலகம் எதிரே இருக்கும் தனியார் நிதி நிறுவனத்திற்கு நேரில் சென்று அலுவலகத்திற்குள் நின்றபடி தீக்குளிக்க முயற்சித்தார். பின் அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி அந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டார்கள்.

அப்பொழுது அவர் கூறியதாவது, 2018 ஆம் வருடம் இந்த நிறுவனத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் கடன் பெற்றேன். வட்டியோடு 3 லட்சத்து 60 ஆயிரம் செலுத்தி இருக்கின்றேன். இதுவரை 43 தவணை செலுத்தி இருக்கின்றேன். ஆனால் 33 தவறை தான் நான் செலுத்தி இருப்பதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றார்கள்.

வேறு இடங்களில் 1 லட்சத்து 40 ஆயிரம் கடன் வாங்கி இந்த கடனை அடைத்து விடலாம் என எண்ணி வந்தேன். ஆனால் மேலும் 3 லட்சம் செலுத்த வேண்டும் என கூறுகின்றார்கள். சில நாட்களாக இந்த நிறுவனத்திற்கு வந்து சென்றேன். தீர்வு கிடைக்காத காரணத்தால் நான் தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவித்தார். இதன்பின் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே சுப்பிரமணிக்கு ஆதரவாக பாஜக பொதுச்செயலாளர் மலைச்சாமி தலைமையில் நிர்வாகிகள் சிலர் அந்த நிதி நிறுவனத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் ஊழியர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.