சேலம் மாவட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி பகுதியில் ராகதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். நேற்று ராகதேவன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று நுழைவு வாயில் முன்பு உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அந்த விசாரணையில் ராகதேவன் கூறியதாவது, சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த நித்யா(21) என்பவர் சேலத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஒரு வங்கி தேர்வு எழுத வந்தபோது நித்யாவுக்கும், எனக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 6- ஆம் தேதி மின்னாம்பள்ளியில் இருக்கும் கோவிலில் நானும் நித்யாவும் திருமணம் செய்து கொண்டோம். இதனை அறிந்த நித்தியாவின் உறவினர்கள் உங்களுக்கு மண்டபத்தில் வைத்து திருமணம் செய்து வைக்கிறோம் எனக் கூறி எனது மனைவியை சென்னைக்கு அழைத்து சென்றனர்.

அதன் பிறகு நித்யாவை என்னுடன் அனுப்பி வைக்கவில்லை. இதனால் நான் சென்னைக்கு சென்று பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தேன். ஆனாலும் நித்தியாவை கண்டுபிடிக்க இயலவில்லை. எனக்கு மனைவியை பிரித்து அழைத்து சென்றதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக ராகதேவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.