வெல்டிங் பட்டறையை அப்புறப்படுத்தியதால் தாய்-மகன் தீக்குளிக்க முயற்சித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் இருக்கும் லால்பகதூர் சாஸ்திரி சாலையைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவரின் மனைவி கலைப்பொன்னி. சிவராஜ் சென்ற ஐந்து வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் கலை பொன்னியின் மகன்களான தில்லை அரசன், காவிய தர்ஷன், பொற்செல்வன், மகள் திகழ்மதி உள்ளிட்டோர் வெல்டிங் பட்டறை கவனிக்கின்றார்கள்.

இந்த நிலையில் வெல்டிங் பட்டறையை அதன் உரிமையாளர் வேறொரு நபருக்கு சில மாதங்களுக்கும் முன்பாக விற்பனை செய்து விட்டார். அதை விலைக்கு வாங்கிய புதிய உரிமையாளர் உடனடியாக காலி செய்யும்படி கூறுகின்றார். இதனால் கலைப் பொன்னி குடும்பத்தினர் காவல் நிலையத்தில் வெல்டிங் பட்டறையை சிறிது காலம் நடத்த அனுமதி கேட்டு புகார் கொடுத்து இருந்தனர்.

அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக இரவில் வெல்டிங் பட்டறை இடிக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த வெல்டிங் பொருட்களும் அகற்றப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கலைப்பொன்னி மற்றும் அவருடைய மகன் காவிய தர்ஷன் பட்டறையை அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சாலையில் நின்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்கள்.

இதன்பின் போலீசார் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு அவர்கள் தீக்குளிக்கும் முயற்சியை கைவிட்டார்கள். இதன் பின் தாயும் மகனும் சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பின்னர் போலீசார் கலைப்பொன்னியின் குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டார்கள்.