ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டு குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரத்தில் 15ஆம் தேதியும் 16ஆம் தேதி பாலமேட்டிலும் 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகள் அரசு வெளியிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் நடத்தப்பட இருக்கின்றது.

ஆகையால் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் www.madurai.nic.in என்ற இணையதளத்தில் தங்களின் பெயர்களை பதிவிட வேண்டும். மேலும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், வயது சான்றிதழ், கொரோனா தடுப்பூசி சான்றிதழ் உள்ளிட்டவற்றை பதிவு செய்ததோடு இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்குள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் போட்டியில் அனுமதிக்கப்படுவர்.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமலும் எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமலும் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகின்றது. மேலும் பார்வையாளர்கள் 150 பேரும் 50 சதவீதத்திற்கு அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் இருக்க வேண்டும். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட மூன்று கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் ஏதாவது ஒரு கிராமத்தில் பங்கேற்க மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வையிடும் அதிகாரிகள், பார்வையாளர்கள் அனைவரும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்று உள்ளிட்டவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வெளியூரில் வசிப்பவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலமாக காண அறிவுறுத்தப்பட்டிருக்கின்றார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.