பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகி பண்டிகையாகும்.  போகி பண்டிகையில் பழையன கழிதலும் புதியன புகுதலும் இந்த பண்டிகையின் சிறப்பாகும். இந்த போகிப் பண்டிகை தினத்தில் மக்கள் எல்லோரும் தங்களது வீடுகளில் உள்ள பழைய பொருட்களை வெளியேற்றி அதனை தீ வைத்து எரிகின்றனர். அந்த பழைய பொருட்கள் அனைத்தும் தீயில் எரிவதுபோல நம் மனதில் இருக்கும் தீய எண்ணங்களும் நீங்கி புது வாழ்வு பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த வருடம் ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் காற்று மாசுபாட்டை தவிர்க்கும் விதமாகவும் பிளாஸ்டிக், ரப்பர் ட்யூப் பொருட்களை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களை எரிப்பதனால் காற்று மாசுபாடு அதிகரிக்கும் என்ற காரணத்தினால் பொதுமக்கள் மேலே கூறப்பட்டுள்ள பொருட்களை எரிப்பதை தவிர்த்து அந்த பொருட்களை மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.