நான்கு வழி சாலை பணிக்காக 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை நகர்த்தும் பணி நடந்து வருகின்றது.

விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு தேசிய நெடுஞ்சாலை செல்கின்ற நிலையில் சென்ற 2018 ஆம் வருடம் நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த நிலையில் சென்ற 2019 ஆம் வருடம் ஜனவரி மாதம் ரூபாய் 6431 கோடியில் நான்கு வழி சாலைக்கான பணிகள் ஆரம்பமானது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில் விழுப்புரம் அருகே இருக்கும் கெங்கராம்பாளையம் கிராமத்தில் இருக்கும் கெங்கை முத்துமாரியம்மன் கோவிலை தேசிய நெடுஞ்சாலை துறை கையகப்படுத்தியது. இந்த கோவில் எழுபது வருட பழமை வாய்ந்த கோயிலாகும்.

இந்த நிலையில் நான்கு வழி சாலை பணிக்காக கோயில் கையகப்படுத்தப்பட்டு அதற்கான இழப்பீடு வழங்குவதற்காக இந்து சமய அறநிலையத்துறை 73 லட்சம் மதிப்பீடு செய்து இழப்பீடாக நகாய் நிறுவனத்திற்கு பரிந்துரைத்தது. ஆனால் இழப்பீடாக 23,36,000 வழங்கபட்டது. கிடைத்த தொகையை வைத்து புதிய கோவில் கட்டமுடியாது என்பதாலும் புதிய கோவில் கட்டுவதற்கு ரூபாய் 70 லட்சம் தேவைப்படுவதாலும் கோவில் இடிக்கப்படாமல் அதனை நகர்த்தி வைக்க முடிவெடுத்தனர்.

அதற்கான பணியை பீகாரைச் சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கோவிலை 61 அடி தூரத்திற்கு நகர்த்தி வைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றது. இந்த பணிகளானது இழப்பீடாக கிடைத்த தொகையில் 21 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகள் நிறைவு பெற மேலும் இரண்டு மாதம் ஆகலாம். இதன் பின் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளார்கள்.