
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோவை காட்டி மிரட்டிய ஹோட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் அடுத்திருக்கும் சோழவரம் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, நான் ஹோட்டலில் பணியாற்றி வருகின்றேன். மேலும் அந்த பகுதியில் இருக்கும் பெண்களுக்கு மகளிர் சுய உதவிக் குழு மூலமாக கடன் வாங்கியும் கொடுத்து வந்தேன்.
இதே போல் சோழவரத்தில் இருக்கும் ஹோட்டலில் சமையல் காரராக வேலை செய்யும் மதுராந்தகம் பகுதி சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கும் கடன் வாங்கி கொடுத்தேன். ஆனால் அவர் வாங்கிய கடனுக்கு சரியாக தவணை செலுத்தவில்லை. தவணை தொகையை கட்டுமாறும் நான் அறிவுறுத்தி வந்தேன்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக மொத்த தவணையையும் செலுத்தி விடுவதாகவும் நேரில் வாங்கிக் கொள்ளுமாறும் தெரிவித்தார். இதனால் அவர் தங்கி இருக்கும் அறைக்கு நான் சென்றபோது அவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து எனக்கு கொடுத்திருக்கின்றார். அதை குடித்த நான் மயங்கி விட்டேன். அப்போது அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்ததோடு வீடியோவும் எடுத்து வைத்திருக்கின்றார்.
இதன் பின் அந்த வீடியோவை காட்டி பலமுறை எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு பணம் கேட்டு மிரட்டுகின்றார். இதற்கு நான் மறுத்தால் வீடியோவை எனது குடும்பத்தினருக்கு அனுப்பினார். ஆகையால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ்குமாரை தேடி வந்த நிலையில் செல்போன் சிக்னல் மூலம் அவரை போலீசார் கைது செய்தார்கள்.