கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குளத்துப்புழா பகுதி உள்ளது. இங்கு  கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாய் சின்னத்தம்மா (90). அதிக வயது முதிர்வு காரணமாகத் தள்ளாடிய அவர், படுத்த படுக்கையாகவே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னத்தம்மா திடீரென உயிரிழந்தார்.

தன்னைப் பெற்ற தாயின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத கிருஷ்ணசாமி, தாயின் மறைவை வெளி உலகுக்குத் தெரியப்படுத்தாமல் முற்றிலும் ரகசியமாக மறைத்துள்ளார். சடலத்தில் இருந்து துர்நாற்றம் எதுவும் வீசாமல் இருப்பதற்காக, அவர் தினமும் தாயின் உடலை ஈரத்துணியால் துடைத்து, அதன் மேல் வாசனைப் பவுடர் பூசி, சுத்தமான வெள்ளைத் துணியால் மூடிப் பாதுகாத்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, தனது தாயின் சடலத்தைத் தெய்வமாகவே பாவித்து, தினமும் அதற்குச் சிறப்புப் பூஜைகள் மற்றும் சடங்குகளைச் செய்து வழிபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சூழலில், கிருஷ்ணசாமியின் மகள் தன் பாட்டியைப் நலம் விசாரிப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே தனது பாட்டி நீண்ட நாட்களாக இறந்து சடலமாகக் கிடப்பதைக் கண்டு அவர் அலறியடித்துக் கத்தினார். பேரதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், மூதாட்டி சின்னத்தம்மாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து நடத்திய தீவிர விசாரணையில், கிருஷ்ணசாமி கடுமையான மனநல பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, மனநலப் பாதிப்பால் தவித்த கிருஷ்ணசாமியை மீட்டுத் தகுந்த சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இறந்த தாயின் உடலை யாருக்கும் தெரியாமல் வைத்து 3 நாட்களாக பூஜை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.