சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லாவாக்கம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகன் ஸ்ரீதர் உடன் பேரளம் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இதேபோல் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல், அவரது உறவினர்கள், சிறுவர்கள் என 9 பேர் கருவேப்பிலங்குறிச்சியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆண்டிமடம்- விருதாச்சலம் சாலையில் கருக்கை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது 2 கார்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் மனோகரன், ஸ்ரீதர், வெற்றிவேல் உள்பட 9 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கருக்கை பேருந்து நிறுத்தம் அருகே அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.